கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறு செய்ய வற்புறுத்திய வழக்கில், நிர்மலா தேவியின் போலீஸ் காவல் இன்று நிறைவடைகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாக நிர்மலாதேவி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
கைதான நிர்மலா தேவி, 12 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தவழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விருதுநகர் சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஆளுநர் அமைத்த விசாரணை குழு அதிகரி ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
நிர்மலா தேவியின் போலீஸ் காவல் இன்று நிறைவடைகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ள சிபிசிஐடி, நிர்மலா தேவியிடம் மேலும் சில தினங்கள் காவலில் எடுக்க மனு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது, வணிக மேலாண்மைத்துறை உதவிப் பேராசிரியர் முருகன், மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி குறித்த விவரங்களை அவர் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் 4 தனிப்படைகளைச் சேர்ந்த சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்த முருகனிடம், சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அளித்தனர். விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான முருகன் மற்றும் காமராசர் பல்கலைக்கழகத் தொலைதூர கல்வி இயக்குநர் விஜயதுரையிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். இதற்கிடையே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டாக பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த காட்சிகளைக்கொண்டு விசாரணை நடத்தவும் திட்டமிட் டுள்ளனர்.