தமிழ்நாடு

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம்; சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

Sinekadhara

சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி உள்ளது.

கடந்த 18ஆம் தேதி இரவு கீழ்ப்பாக்கம் பகுதியில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் பிடிபட்ட விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டபோது வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டதை அடுத்து, சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சரவணன் விசாரணையைத் தொடங்கி உள்ளார். அவர் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் தலைமைச் செயலகக் காலனி காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். விக்னேஷ் கைது தொடர்பான ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். அடுத்தகட்டமாக விக்னேஷின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.