தமிழ்நாடு

`ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் சொன்னால் ரூ.50 லட்சம் சன்மானம்’- சிபிசிஐடி போஸ்டர்

நிவேதா ஜெகராஜா

ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு தரப்படும் என சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேரு வின் உடன்பிறந்த சகோதரர் தொழிலதிபர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ல் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவரது உடல், திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராமஜெயத்தை ரவுடிகள் சிலர் கடத்திச் சென்று படுகொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் சென்றது.

சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பின் அந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள், 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.

அந்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ளதால், திருச்சி சிபிசிஐடி போலீசார் தரப்பில் தரப்பில் போஸ்டரொன்று ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி `திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சரியான தகவல்களை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். மேலும் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும்’ என்று உள்ளது.

இந்த போஸ்டர் கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.