தமிழ்நாடு

திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல் : சிபிசிஐடி அதிரடி

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் மற்றும் பென்டிரைவை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முதல் பொள்ளாச்சியில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆய்வு செய்த சிபிசிஐடி காவல்துறையினர், இரண்டாவது நாளாக இன்று மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்று மதியம் 3 மணியளவில் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் உள்ளிட்ட காவல்துறையினர் வீட்டிலிருந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டனர். இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய தடயமாக இருந்த லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருநாவுக்கரசிடம் நட்பாக பழகிய நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.