தமிழ்நாடு மின்சார வாரியம் web
தமிழ்நாடு

மின்வாரியத்தில் தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் சென்ற நிலையில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஊழியர்களின் கணினிகளில் இருந்த ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட வழக்கு, அதன் முக்கியத்துவம் காரணமாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர் கோபிநாத், பெங்களூரு கடை உரிமையாளர் முரளி மனோகர் கைது செய்யப்பட்ட நிலையில், 34 ஹார்ட் டிஸ்குகள், 20 ரேம் பாகங்கள் மீட்கப்பட்டன. மின்வாரிய அதிகாரிகளிடம் இருந்து சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கணினிகளில் இருந்து ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், கடந்த மே 18ஆம் தேதி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அலுவலகத்தில் கணினி பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான கோபிநாத் (31) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கடை உரிமையாளரான முரளி மனோகர் (32) என்பவரிடமிருந்து வழக்கில் தொடர்புடைய அனைத்து ஹார்ட் டிஸ்குகளும் மீட்கப்பட்டன.

மேலும், கோபிநாத் இதற்கு முன்பு பணியாற்றிய சில நிறுவனங்களிலிருந்தும் கணினி உதிரிபாகங்களை திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 34 ஹார்ட் டிஸ்குகள் மற்றும் 20 ரேம் (RAM) பாகங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. திருடப்பட்ட பொருட்களை வாங்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் முரளி மனோகரும் மற்றும் திருட்டில் ஈடுபட்ட கோபிநாத் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. 

இந்தநிலையில், மின்வாரிய தலைமை அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரையை ஏற்று, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டப்பட்டுள்ளது. மின்வாரிய வளாகத்தில் இருந்து தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட நிலையில்,இந்த திருட்டுகள் குறித்து இதற்கு முன்பு ஏன் புகார் அளிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. வழக்கின் முக்கியத்துவம் சார்ந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி அதிகாரிகள் முதல் கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் பதிவு செய்த வழக்கை பின்பற்றி புதியதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மொடக், வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்பி பிரபுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல கண்காணிப்பு அதிகாரியாக எஸ்பி சாஜிதாவை நியமித்துள்ளார்.

அடுத்தகட்டமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபிநாத், முரளி மனோகர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் வழக்குத் தொடர்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.