தமிழ்நாடு

இளவரசன் மரணம் தற்கொலைதான்... வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

இளவரசன் மரணம் தற்கொலைதான்... வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

Rasus

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சிபிசிஐடி அளித்த அறிக்கையை ஏற்று அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திவ்யாவின் பெற்றோர் தரப்பில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர்களுடன் செல்‌ல விரும்புவதாகக் கூறி திவ்யா பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த விசாரணையில் திருப்தி இல்லை எனக் கூறி இளவரசனின் தந்தை இளங்கோ சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹூலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி காவல்துறையினர் இளவரசன் மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் இளவரசன் உடலில் மூன்று முறை செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ததாகவும், அவரது உடலுக்கு அருகே கிடந்த தற்கொலைக் கடிதம் உள்ளிட்ட ‌தடயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த விசாரணையின் அடிப்படையில் இளவரசனின் மரணம் தற்கொலைதான் என முடிவு செய்திருப்பதாக சிபிசிஐடி காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த‌ அறிக்கையை ஏற்கக்கூடாது என வாதிட்டார். ஆனால் சிபிசிஐடி அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், இளவரசனின் தந்தை இளங்கோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.