செய்தியாளர்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
இந்தாண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்தால் கேரளா, கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைவாகவே பதிவாகி வருகிறது. கடந்த 10 நாட்களாக பரவலாக பருவமழை தீவிரமடைந்து நீர்நிலைகளுக்கு சற்றுச் சாதகமாக அமைந்து சற்றே நம்பிக்கை அளித்து வந்தது. இந்நிலையில் கடல் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சாதகமற்ற நிலையால், அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்கு காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பலவீனமடைந்தும், இயல்பைவிட குறைவாகவும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணை நீர் இருப்பு 40 TMC ஆக உள்ளது. இந்தாண்டு ஜூன் 12-ஆம் தேதியும் 40 TMC அளவிலான நீர் இருப்புதான் இருந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை குறையத் தொடங்கியுள்ளதால், அடுத்த சில நாட்களில் கபினி அணையின் உபரிநீர் திறப்பை கர்நாடக அரசு கணிசமாகக் குறைக்கக்கூடும்.
ஏற்கெனவே குறுவை சாகுபடியைக் கைவிட்டு வறண்டு காணப்படும் காவிரி டெல்டா விவசாயிகள், சம்பாப் பட்டத்திற்கான பணிகளை எப்போது தொடங்குவது என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், இந்தச் சூழல் மேலும் கவலையைத்தான் அளிக்கும். வரும் நாட்களில் பகல்நேர வெப்பநிலை மேலும் உயரும் என்பதால், முன்சம்பாவிற்குச் சாதகமான சூழல் இல்லை.
வெப்பச்சலன மழை – சாதகம், பாதகம்!
கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரம் குறைந்துள்ளதால், பகலில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழலும், மாலை/இரவு ஆங்காங்கே வெப்பச்சலன இடிமழையும் பதிவாகக்கூடும். தெற்கு டெல்டா விவசாயிகள் இந்த இடிமழையைப் பயன்படுத்தி உழவு ஓட்டி, சம்பாவிற்கு முன்னேற்பாடுகளைத் தயார் செய்து வையுங்கள். குறுவை அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் வடக்கு டெல்டா விவசாயிகள், அறுவடை செய்த தானியங்களைப் பத்திரப்படுத்துவது அவசியம். பகலில் வெயில் இருந்தாலும், அடுத்த சில நாட்களுக்கு மாலை/இரவு இடிமழை வாய்ப்பு உள்ளதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைச் சேமித்து வைத்துள்ள விவசாயிகள் மழைச்சாரல் படாதவாறும், தாழ்வான இடங்களில் இல்லாததையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.