தமிழ்நாடு

அமைக்கப்படுமா காவிரி மேலாண்மை வாரியம்? இன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு

அமைக்கப்படுமா காவிரி மேலாண்மை வாரியம்? இன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு

webteam

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்த கெடு, இன்றுடன் முடிய ‌ உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து அமைச்சர்களுடன்‌ இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைவதால் தமிழகமே மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது.இந்நிலையில், சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் நேற்று காலை சென்னை புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க இன்று அனைத்து அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க துணை முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.