தேசிய நதிநீர் சட்டத்தை திருத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய நதிநீர் விதிகளை மத்திய அரசு முறையாக கடைப்பிடிப்பதில்லை எனக்கூறிய தமிழக அரசு, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த இறுதி விசாரணையில் தமிழக அரசின் வாதம் இன்று தொடங்கியது. அப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன எனக் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.
விவாதத்தில் பேசிய தமிழகத் தரப்பு வழக்கறிஞர், காவிரி நீர் கிடைக்காததால் காவிரி பாசன பகுதியின் பரப்பளவு பெரிதும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். நதிநீர் பங்கீடு என்பது புவியியல் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் விதி என்றும் தமிழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.