உச்சநீதிமன்றம் அளித்துள்ள காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. வழக்கின் அனைத்து கட்ட விசாரணைகளும் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி நதி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்துள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, ’காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம்தான். இருந்தாலும் கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்த நீரை எப்படி உபயோகமாகப் பயன்படுத்த வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். ஆனால் தீர்ப்பு அழுத்தமாக இருப்பது ஆறுதலாக இருக்கிறது. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் காவிரி சர்ச்சையை தூண்டிவிடக் கூடாது. இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்று சர்ச்சையை ஏற்படுத்திவிடக் கூடாது. ஒற்றுமையாக இருந்தால் நதிகளை இணைக்க முடியும். நிலத்தடி நீர்மட்டத்தை அரசு பாதுகாக்கவில்லை என்றால் நாம் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.