தமிழகத்திற்கு முக்கிய நீராதாரமான காவிரி ஆறு மேட்டூர் அணையிலிருந்து நாகப்பட்டினம் வரை பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்துகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து ஈரோடு மாவட்டத்திற்கு செல்கிறது. அங்கு சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களின் பாசனத்திற்குப் பயன்படும் காவிரி, பின்னர் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதி அளித்துவிட்டு திருச்சியை வந்தடைகிறது. இம்மாவட்டத்தில் காவிரி ஆறு மூலம் சுமார் 2,40,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பின்னர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களை வந்தடையும் காவிரி நீர், டெல்டா பகுதிகளில் சுமார் 4,30,000 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. பின்னர் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்திலுள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்திவிட்டு கடலில் கலக்கிறது. இதற்கிடையில், திருச்சி கல்லணைப் பகுதியில் கிளைகளாகப் பிரியும் காவிரி நீரானது அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் பாசனத்திற்கு பயன்படுகிறது.