தமிழ்நாடு

தமிழகத்துக்கு நிலுவையிலுள்ள நீரை வழங்குக: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

நிவேதா ஜெகராஜா

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் இன்று மாலை நேரத்தில் தொடங்கியிருந்தது. அதன்முடிவில், செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகா விடுத்த கோரிக்கைக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, “மேகதாது அமைக்க தமிழகம் உள்ளிட்ட கீழ் பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கர்நாடக அரசு அணை அமைக்க அனுமதி கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது” என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் தெரிவித்தார். மேலும் “ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும்” என காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் இக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சுப்பிரமணியமன் பங்கேற்றனர். ஆணைய தலைவர் எஸ்.ஏ.ஹல்தர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் காவிரி நீர், மேகதாது அணை பற்றி கடுமையான விவாதம் நடைபெற்றுள்ளது.