தமிழ்நாடு

குடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது !

குடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது !

webteam

ஓமலூர் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் செல்லும் குழாயை உடைத்த இருவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மேட்டூரில் இருந்து காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஓமலூர் வட்டார கிராம மக்கள் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தில் வசிக்கும் பெருமாள், பெரமகவுண்டர் ஆகிய இருவரும் அந்த வழியாக செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர். 

இதனால், பொட்டியபுரத்தில் இருந்து மணக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓமலூர் உதவி பொறியாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அந்த கிராமத்திற்கு தண்ணீர் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் பெருமாளும், பெரமகவுண்டரும் தண்ணீர் செல்லும் குழாயை உடைத்தது தெரிய வந்தது. அவர்களிடம் கேட்டபோது அப்படித்தான் உடைப்போம் என்று உதவி பொறியாளர் ரமேஷை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் உதவி பொறியாளர் ராகேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், பைப்லைன் உடைப்பால் தற்போது பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் பைப்லைனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால், குடிநீர் விநியோகம் செய்வதில் எந்தவித பிரச்னையும் கிடையாது. அனைவருக்கும் இன்று மாலையும், அதனை தொடர்ந்தும் குடிநீர் விநியோம் செய்யப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

குடிநீர் குழாய் உள்ளிட்ட பொது சொத்துக்களை செதபடுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து கைது செய்த இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.