காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவது, அதனை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் 100 பேர் கடந்த 24ஆம் தேதி டெல்லி சென்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.