காவிரி வழக்கில் விசாரணை முடிந்து 150 நாட்களுக்குப்பிறகு இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் இதுவரை கடந்துவந்த பாதையை தெரிந்து கொள்வோம்.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவ ராய் மற்றும் ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
மனுக்களை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி வழங்கிய உத்தரவில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கும்படி உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை 2016 டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னர் மீண்டும் 2017 ஜனவரி 4ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், காவிரி வழக்கு தொடர்பான விசாரணையை 2017 மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அதுவரை தொடர்ந்து கர்நாடக அரசு, தனது முந்தைய உத்தரவின் பேரில் 2 ஆயிரம் கன அடி அளவு தண்ணீரை தமிழகத்திற்கு தொடர்ந்து திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
காவிரி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை, நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையை அடுத்து ஜூலை 11ம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும் என்றும், இதில் ஒவ்வொரு தரப்பும் வாதத்தை முன்வைக்க ஏதுவாக கால அவகாசம் அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில், அனைத்துதரப்பு வாதங்களும் முடிந்து 2017 செப்டம்பர் 20 ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2018 பிப்ரவரி 16- ஆம் தேதி அதாவது இன்று காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.