காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மூன்றாவது வழக்காக காலை 10.45 மணி முதல் 11 மணிக்குள் விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்த 2 வாரம் கூடுதல் அவகாசம் தேவைப்படுதாக மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவகாசம் கேட்பதற்கு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆட்சேபனை தெரிவித்ததால் பின்னர் மனு திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் மத்திய அரசு, காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மனுவை வாபஸ் பெற்றுள்ள போதிலும், வாய்மொழியாக காலஅவகாசம் கோருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே இன்றைய விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் குறித்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் புதிய திட்டத்தை வகுக்கும்படி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உத்தரவிட்டது. அதற்கான கெடு முடிந்தும் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இந்த வழக்கில் இதற்கு முன் நடந்த விசாரணையின்போது, 2 வாரங்களுக்குள் நதிநீர் பங்கீடு குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில், இன்றைய வழக்கு விசாரணை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.