தமிழ்நாடு

ஸ்கீம்- உச்சநீதிமன்றம் புதிய விளக்கம்

ஸ்கீம்- உச்சநீதிமன்றம் புதிய விளக்கம்

Rasus

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீது வரும் 9ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தும், மத்திய அரசு இன்னும் ஆணையத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது. இதனிடையே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

நீதிமன்ற அவமதிப்பை வழக்கை இன்று விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியிருந்த நிலையில் அதனை வரும் 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு உண்டான தண்ணீர் நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழகத்தின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார். இதனிடையே காவிரி தீர்ப்பில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வழக்கறிஞர் கருத்து தெரிவித்தனர். இதற்கு விளக்கம் கொடுத்த உச்சநீதிமன்றம், ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மட்டும் குறிக்கவில்லை. காவிரி பிரச்னையைத் தீர்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஸ்கீம் இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியமும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கீழ் அடங்கும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தது.