தமிழ்நாடு

“காவிரி ஆணையம் கர்நாடகாவுக்கு துணை போகிறது” - திருமாவளவன்

Rasus

உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் மறைமுகமாக துணை போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காவிரி மேலாண்மை ஆணையம் ஒருபுறம் உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே மறுபுறம் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடகா அரசுக்கு துணை போவதாக தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான துரோகம் எனக் குறிப்பிட்டுள்ள திருமாவளவன், கடந்த ஜூன் மாதத்திற்கான தண்ணீரை  கர்நாடகா அரசு ஏன் கொடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து இல்லை. மழை பெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்‘ எனக் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசியதை சுட்டிக் காட்டியுள்ள திருமாவளவன், இது மறைமுகமாக கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் மேலாண்மை ஆணையத்தின் கூட்டதை பெங்களூரிலேயே நடத்தலாம் என்று தமிழக அரசு கருத்து தெரிவிப்பது தமிழக நலனுக்கு எதிரானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் மிகப் பெரும் கிளர்ச்சி ஏற்படும் எனவும் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.