செய்தியாளர்:ஆஜா செரிப்
திருவண்ணாமலையில் உள்ள ஒரு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த விவசாயியின் பயிர்களை வேறு சமுதாயத்தை சேர்ந்த சிலர் ட்ரோன்களைப் பயன்படுத்தி அளித்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் நடந்தேறியுள்ளது.
பிப்ரவரி 11 ஆம் தேதி திருவண்ணாமலை வந்தவாசி தாலுகாவில் உள்ள அருங்குணம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று, களைகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தை ட்ரோன்களை கொண்டு, 5.5 ஏக்கர் நிலத்தில் தெளித்து பயிர்களை அழித்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தில் பட்டியலின பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனவே, கடந்த செப்டம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மீட்பு நடவடிக்கை மூலம் நடைபெற்ற போராட்டத்தின் பஞ்சமி நிலத்தை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த நிலத்தின் உரிமையாளரான விவசாயி சுகுமார் ஐந்தரை ஏக்கர் முழுவதிலும் உளுந்து மற்றும் பணிப் பயிரை பயிரிட்டு நல்ல முறையில் வளர்த்து வந்துள்ளார்.
பயிர் முற்றி, காய் பிடித்து அறுவடைக்கு பத்து நாட்களே உள்ள நிலையில் கடந்த எட்டாம் தேதியன்று, இவரது நிலத்தை முன் வைத்திருந்த உரிமையாளர் விவசாயி சுகுமாரை மிரட்டியுள்ளார். இதனால், அஞ்சிய சுகுமார் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரும் அளித்துள்ளார்.
பின்னர், தன்னுடைய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் சுகுமார். இந்த சமயத்தில்தான், நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் ட்ரோன் மூலமாக இவரது ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் இருந்த உளுந்து மற்றும் பணிப் பயிர்களின் மீது களைக்கொல்லிகளை தெளித்து வருந்துள்ளனர். தகவல் அறிந்த சுகுமார் நேரடியாக அங்கு சென்று பார்த்துள்ளார். பச்சை நிறத்தில் இருந்த பயிர்கள் எல்லாம் வெண்மை நிறத்தில் இலைகள் மாறி சாகத் தொடங்கியுள்ளது.
மேலும், விவசாயி சுகுமார் எடுத்த வீடியோவில், ட்ரோன் மூலமாக பயிரை அழிப்பதும் சுகுமாரிடம் வாக்குவாதம் செய்வதும், முகத்தை காட்டி, ‘எங்களை வீடியோ எடுத்து போடு. எங்களை ஒன்றும் செய்ய முடியாது ‘ என்று சவால் விடுவதும் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெள்ளார் காவல் நிலையத்தில் சுகுமார் புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனம் வெதும்பி அழுத சுகுமார், மாவட்ட காவல் துறை நிர்வாகம், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து தெள்ளார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சத்யாவிடம் கேட்டதற்கு, விவசாயி சுகுமாரின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.