சாதியை காரணம்காட்டி திறந்தவெளி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது
மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் அருகே து.சாணார்பட்டி கிராமத்தில் கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் அந்த பகுதியில் உள்ள பெண்கள் அரசு புறம்போக்கு இடத்தை கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைத்துகொண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்கள், குழந்தைகளை செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்து மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையிலும் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை எனக்கூறி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அப்பகுதி பெண்கள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது வீடுகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பணிக்கு சென்ற பின்பாக வீட்டில் உள்ள இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பகல்நேரங்களில் திறந்தவெளி கழிப்பறைக்கு செல்லும் போது ஆக்கிரமிப்பாளர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடபோவதாக மிரட்டுவதால் தினசரி அச்சத்தில் இருப்பதாக கண்ணீர் வடித்து கதறி அழுகின்றனர் எனவும் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்காத நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.