தமிழ்நாடு

“ஓட்டுக்கு பணமே தமிழக தேர்தலில் மிகப்பெரிய பிரச்னை”- தேர்தல் ஆணையம்

“ஓட்டுக்கு பணமே தமிழக தேர்தலில் மிகப்பெரிய பிரச்னை”- தேர்தல் ஆணையம்

Rasus

தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் அளிப்பதே மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வரை வாக்குப்பதிவு நேரங்களில் வன்முறை மிகப்பெரிய பிரச்னையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது ஓட்டுக்கு பணம் அளிப்பதே நாளுக்கு நாள் மிகப்பெரிய பிரச்னையாக நீண்டு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நியாயமான தேர்தல் நடைபெற ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஊழல் எதிர்ப்பு பரப்புரை என்பது தேர்தல் நேரங்களில் மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையமோ, தொடர்ச்சியான விழிப்புணர்வுக்கு போதிய அளவில் ஆட்கள் இல்லை என தெரிவித்தது.

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததிலிருந்து நேற்று முன்தினம் வரை‌ நாடு முழுவதும் உரிய ஆவணம் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.