மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வலியுறுத்தி சுற்றியுள்ள மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதை தமிழக அரசும், மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, தற்போது டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி 11,608 பொதுமக்கள் மீது தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம், மேலூர் காவல் நிலையங்களில் பதியப்பட்ட வாக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.