தமிழ்நாடு

மத்திய சிறை அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறைக் கைதி மீது வழக்குப்பதிவு

webteam

கோவை மத்திய சிறை அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிப். இவருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த புகாரின் பேரில் இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சில மாதத்திற்கு முன்பு சோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஆசிப்பை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆசிப்பை பார்ப்பதற்காக அவரது தந்தை சிறை வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆசிப், தனது தந்தையுடன் பேசுவதற்கு முறையாக அனுமதி தரவில்லை எனக் கூறி அங்கு இருந்த சிறை அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறை நிர்வாகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆசிப்; வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ பதிவு இருந்தது. இதை வைத்து விசாரித்த காவல்துறை ஆசிப் மீது கொலை மிரட்டல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.