அரியலூரில் தேர்தல் கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரி, குடிபோதையில் வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கல்சன் என்பவர் தேர்தல் பணிக்காக, அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள ஹேமந்த், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவருடன் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியின் துப்பாக்கியால் திடீரென வானத்தை நோக்கி ஒன்பது முறை சுட்டுள்ளார். இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
(ஆட்சியர் விஜயலட்சுமி)
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் பெரம்பலூர் காவல் அதிகாரிகள் ஹேமந்திடன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குடிபோதையில் சுட்டதாக ஹேமந்த் தெரிவித்தார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த தகவல் மாநில தலைமை தேர்தல் அலுவலருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஹேமந்த் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.