கடலூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்வில் சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் ரங்கநாதன் சீமான் காரை வழிமறித்து திட்டியதால், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகியை தாக்கியதாக கூறப்படுகிறது. இருதரப்பு புகார்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
மாநாடு முடிந்து காரில் ஏறி புறப்பட்டதும் சிறிது தூரத்தில் திமுக பிரமுகரான ரங்கநாதன் என்பவர், சீமான் சென்ற காரை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சீமான் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிய போது, அவருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திடீரென திமுக நிர்வாகியை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர். திமுக நிர்வாகி அங்கிருந்து சென்றதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விருத்தாசலம் பொன்னேரி -சித்தலூர் புறவழிச் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீமானை திட்டி தாக்க முயற்சி செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து ஊர்வலமாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று திமுக நிர்வாகி மீது புகார் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் திமுக பிரமுகரான ரங்கநாதன் தன்னை நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக புகார் கொடுத்திருந்தார். இருதரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில் திமுக பிரமுகரை அசிங்கமாக திட்டி, தாக்கியதாகவும், கலவரம் செய்ததாகவும், கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறி 191(2), 296(b), 115(2), 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காரை வழிமறித்து, அசிங்கமாக திட்டி தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர் விருத்தாசலம் காவல்துறையினர்.