‘சர்கார்’ படத்திற்காக நடிகர் விஜயின் பேனரை அனுமதியின்றி வைத்ததாக ரசிகர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘சர்கார்’ படத்தில் அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக அதிமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ‘சர்கார்’ படம் திரையிடப்பட்ட இடங்களில் அதிமுகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்குகள் முன்பாக வைத்திருந்த விஜய் ரசிகர்களின் பேனர்களையும் அதிமுகவினர் கிழித்தனர்.
இதனிடையே, அனுமதியின்றி பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘சர்கார்’ படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக இந்த நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்துள்ளனர்.
திருவாரூரில் பேனர் அமைத்ததற்காக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று நாகையில் 20 ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கரூர், மணப்பாறை மற்றும் தஞ்சாவூரிலும் விஜய் ரசிகர் மன்றத்தினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.