வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தச் சரணாலயத்திற்கு 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன. ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கல் வருவது வழக்கம். சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் வேடந்தாங்கலின் பரப்பைக் குறைக்கத் தடை விதிக்க கோரி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்தச் சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோமீட்டரிலிருந்து 3 கிலோமீட்டராகக் குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்திற்குக் கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ளார். தனியார் நிறுவனத்திற்காகச் சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது தவறான செயலாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், விதிமுறைகளுக்கு முரணாகச் சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு ஜூன் 22ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது.