திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் திருமண மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்த பின், அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என்று தங்களுக்கு புகார் வந்ததாக தெரிவித்தனர். வட்டாட்சியர் சுஜாதா தலைமையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சுஜாதா, ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், கட்சி நிர்வாகிகள், மண்டப உரிமையாளர் ஜக்கரியா, சுன்னத் ஜமாத் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரியின் உத்தரவை மீறியது, தனிப்பட்ட செல்வாக்கை தவறுதலாக பயன்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சீல் வைத்துள்ளதால் இந்த வார இறுதியில் மண்டபத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சீலை அகற்ற உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு ஆம்பூர் திருமண மண்டபத்தினர் சார்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அந்த ஏற்ற நீதிபதி, மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத் தியதுடன், இன்று மதியம் அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.