தமிழ்நாடு

புதிய தலைமுறை மீது வழக்கு: போலீசாரின் நடவடிக்கை குறித்து நாளிதழ்கள் கடும் விமர்சனம்

புதிய தலைமுறை மீது வழக்கு: போலீசாரின் நடவடிக்கை குறித்து நாளிதழ்கள் கடும் விமர்சனம்

Rasus

புதிய தலைமுறை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக தினமலர் நாளிதழ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

‘ஊடக சுதந்திரத்தை பறித்த கோவை போலீஸ்’ என தலைப்பிட்டு தினமலர் நாளிதழின் கோவை பதிப்பில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கு, ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு யார் யார் வருகிறார்கள் என்பது பற்றி காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதையும் தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, காவல்துறையின் நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருப்பதாக தினமலர் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதேபோல் புதிய தலைமுறை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் தெரிவித்த கண்டனங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பதிவு செய்துள்ளது. காவல்துறையினர் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாக, தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும்படி அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதையும் தி இந்து ஆங்கில நாளிதழ் பதிவு செய்துள்ளது. தினந்தந்தி நாளிதழிலும், வட்ட மேசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து புதிய தலைமுறை மீது காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்த செய்தி வெளியாகியுள்ளது.