kallakurichi mla file photo
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏ மீது 5 பிரிவில் வழக்கு.. பதவி பறிபோகும் வாய்ப்பு! குற்றம் நிரூபமானால் என்ன நடக்கும்?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் - எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குபதிவு!

Rishan Vengai

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது. மேலும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கடந்த சில வாரங்களாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது வதந்தி என்றும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக அமைச்சர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

மறுபக்கம் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், இது பொய்யான தகவல். தவறான கண்ணோட்டத்தில் மெசேஜ் அனுப்பவில்லை. திமுக ஐடி விங் மூலமாக பொய் தகவல் பரப்பட்டு வருவதாக தெரிவித்தார். இன்னொரு பக்கம் சம்மந்தப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் வெளிப்படையாக எந்த புகாரும் தெரிவிக்காத நிலையில், இவ்விவகாரம் மேலும் மேலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவே இருந்துவந்தது.

இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகாரின் பேரில், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

வழக்குப் பதிவைத் தொடர்ந்து, தனிப்பிரிவு காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் இல்லத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தொண்டர்கள் குவிந்ததால் எம்.எல்.ஏ-வின் வீடு பூட்டப்பட்டது.

குற்றம் நிரூபனமானால் என்ன நடக்கும்?

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில், ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் மற்றும் வருவாய்த்துறை உயரதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ், வருவாய்த்துறை அதிகாரிகள், ஆட்சியரின் உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சம்மன் அனுப்பியுள்ளது காவல் துறை. இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30க்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தவிவகாரத்தில் தவெக எம்எல்ஏ மீது குற்றம் நிரூபிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் அவர் தண்டிக்கப்பட்டால் அவரது பதவி பறிபோகும். நிரூபிக்கப்படும் குற்றப்பிரிவுகளுக்கு ஏற்ப தண்டனை விதிக்கப்படும். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும்.