மருத்துவர்கள்போல் பேசி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக மர்ம நபர்கள் மீது திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று வரை 1075 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகளும் அச்சுறுத்தல்களும் பரவி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் அருண்குமார் போல பேசி சமூகவலைதளங்களில் ஆடியோ வெளியானது. இது மாவட்டம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் போல பேசி சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது.இந்த நிலையில் மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மருத்துவர்கள் போல இணையத்தில் வதந்தி பரப்பும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்