மத்திய இணை அமைச்சர் ஷோபா
மத்திய இணை அமைச்சர் ஷோபா pt desk
தமிழ்நாடு

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: தமிழர்கள் மீது அவதூறு - மத்திய இணை அமைச்சர் மீது மதுரையில் வழக்கு

webteam

செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ்

நேற்று கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூருவில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... “மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே-யில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் குண்டு வைக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்” என்றார். அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

Bomb blast

இந்நிலையில் “மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு கர்நாடக மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே பகை மற்றும் வெறுப்புணர்வை வளர்க்க முயற்சிக்கிறது. தமிழ்நாட்டு மக்களை தீவிரவாதிகள் என்று பொதுமைப்படுத்தி தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் என இரு சமூகத்தினரிடையே குழப்பத்தை உருவாக்க முயல்கிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வெறுப்புணர்வை தமிழ் சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் சாத்தியம் உள்ளது” எனக் கூறி மதுரை கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் மதுரை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது 153, 153(A), 505(1)(B), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி மத்திய இணை அமைச்சரின் பேச்சு மீது புகார் அளிக்கப்பட்டுயள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷோபா கரண்ட்லஜே, மு.க.ஸ்டாலின்

முன்னதாக தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரி, அதை திரும்ப பெறுவதாக எக்ஸ் வலைதளம் வாயிலாக நேற்று இரவு 11 மணியளவில் தெரிவித்திருந்தார் ஷோபா கரந்த்லஜே.