பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கு பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான வழக்கின் விசாரணை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்த போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபலும், பேரவை செயலாளர் தரப்பில் விஜய் நாராயண் ஆகியோரும் ஆஜராகி வாதாடினர். பதில் மனு இன்று மாலைக்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் விவாதத்தை வேறு ஒரு நாளில் வைத்துக்கொள்ளலாம் எனவும் பேரவை செயலர் தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை தொடர தயாராக இருப்பதாக திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கூறினார்.
இதனை அடுத்து வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதன்மூலம் பேரவை உரிமைக்குழு ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளித்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தடை நீடிக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஓ.பி.எஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கபில்சிபல் வாதிட்டார். ஒ.பி.எஸ் துணை முதலமைச்சராக உள்ளதால் அது தினசரி விதிமீறல் என்றும் ஆகையால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கபில்சிபல் வாதிட்டார்.