முழுபொதுமுடக்க விதிகளை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறியதாகக்கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலையச் செயலாளர் மகாலிங்கம் உள்பட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக சார்பில் கூட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.