தமிழ்நாடு

சூறாவளியால் மூழ்கிய கப்பல்: உசிலம்பட்டி மாலுமியை மீட்க பெற்றோர் கோரிக்கை

webteam

பிலிப்பைன்ஸ் அருகே பசுபிக் பெருங்கடலில் மூழ்கிய இந்திய சரக்குகப்பலில் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞரை மீட்டு தரக்கோரி அவரது பெற்றோர் கோரிக்‌கை விடுத்துள்ளனர்.

‌சீனாவின் ஹாங்காங் பதிவுஎண் கொண்ட "எமரால்ட் ஸ்டார்" என்ற இந்திய சரக்குகப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 26 மாலுமிகள் பணியாற்றுகின்றனர். பிலிப்பைன்சில் இருந்து 280 கிலோ மீட்டர் கிழக்கே பசுபிக் கடல் பகுதியில் சென்ற போது பயங்கர சூறாவளியால் சரக்குகப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கப்பல் மூழ்கும் போது அபாய சிக்னல் ஜப்பான் கடற்படைக்கு கிடைத்ததும், விபத்து நடந்த இடத்திற்கு 3 கப்பல்கள் விரைந்தன.

இந்நிலையில் கடலில் தத்தளித்த 16 பேரை ஜப்பன் கடற்படையினர் மீட்டதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், சூறாவளி காற்றின் வேகம் குறையாததால் தேடுதல் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீட்கப்படாமல் உள்ள 10 பேரில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் கௌதம் என்ற இளைஞரும் அடங்குவார். இவர் எந்த நிலையில் உள்ளார் என தற்போது வரை தகவல் இடைக்காத நிலையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து அவரை உயிருடன் மீட்டுத்தர அவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.