தமிழ்நாடு

சிலிண்டர் விபத்துகள்.. நாட்டிலேயே அதிக உயிரிழப்புகளை சந்தித்த தமிழகம்..!

சிலிண்டர் விபத்துகள்.. நாட்டிலேயே அதிக உயிரிழப்புகளை சந்தித்த தமிழகம்..!

kaleelrahman


2019ஆம் ஆண்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விபத்துகளில் தமிழகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


வீட்டில் எரிவாயு சிலிண்டர்களை கையால்வதில் உள்ள அலட்சியம் மற்றும் அஜாக்கிரதை காரணமாக இந்தியாவில் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மொத்த விபத்துக்களில் தமிழகத்தில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


சென்னை தேசிய குற்ற ஆவண காப்பகம் 2019 ஆம் ஆண்டின் விபத்து மற்றும் தற்கொலையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வீட்டு உபயோக சிலிண்டர் விபத்துகளில் 2019ல் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2018ல் 649 உயிரிழப்புகளுடன் மகராஷ்ட்ரா முதலிடத்திலும், 391 உயிரிழப்புகளுடன் தமிழகம் 2 ஆம் இடத்திலும் இருந்தது.

ஆனால் 2018 உடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவென்றாலும், 2019ல் 285 உயிரிழப்புகளுடன் மகராஷ்ட்ரா 3 ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டது. 346 உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டரை வாங்கும்போது அதை நன்றாக சோதனை செய்தபின்பே வாங்க வேண்டும். அதேபோல ஆண்டுக்கு ஒருமுறை சிலிண்டருடன் அடுப்பை இணைக்கும் ட்யூபை மாற்ற வேண்டும் என்றார் தீ தடுப்பு வல்லுநர் பிரபுகாந்தி.


2019ல் வீட்டு உபயோக சிலிண்டர் விபத்தில் தமிழகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 80% பெண்கள் என்பதும் துயரமிகு புள்ளிவிவரமாக இருக்கிறது. இந்த விபத்துகளை குறைக்க பெண்கள் வீடுகளில் சிலிண்டர்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று தீக்காயத் தடுப்புப்பிரிவு மருத்துவர் ஏஞ்சலினா கூறினார்.


அதேபோல கிடங்குகளில் சிலிண்டர்களை கையாளும்போது அலட்சியமாக தூக்கிப்போடக் கூடாது, டிராலியில் வைத்தே கையாள வேண்டும், முக்கியமாக இருசக்கர வாகனங்களில் சிலிண்டர்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.