தமிழ்நாடு

மதுரையில் குடியரசுத் தலைவர் செல்வதற்காக இருந்த வழித்தடத்தில் கார் கவிழ்ந்து விபத்து!

PT

மதுரையில் குடியரசுத் தலைவர் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழித்தடத்தில், அவர் செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாக, அந்த சாலையில் பள்ளத்துக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தந்தார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவனியாபுரம், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து குடியரசுத் தலைவர் செல்வதற்கு முன்பாக மதுரை அவனியாபுரத்தில் இருந்து குடியரசுத் தலைவர் செல்லும் பாதையின் குறுக்கே மாற்று பாதையில் மற்ற வாகனங்கள் அனுப்பப்பட்டு வந்தன. அதாவது, அவனியாபுரம் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் வாகனம் செல்ல அனுமதிக்காமல் அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக வைக்கம் பெரியார்நகர் ரிங் ரோடு சென்று அங்கிருந்து மண்டேலா நகர் செல்ல போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அவனியாபுரம் செம்பூரணி ரோடு சந்திப்பில் வைக்கம் பெரியார் நகர் சாலையில் குடியரசுத் தலைவர் வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாக, அந்தப் பாதையில் குறுக்கே செல்லும்போது கண்ணாடி கடை உரிமையாளர் சுரேஷ் என்பவரின் கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து திடீர் விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து அறிந்த அவனியாபுரம் காவல்துறையினர் அந்தக் காரை பளுதூக்கும் இயந்திரம் வைத்து தூக்கி அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, தார்பாய் மூலம் காரை மூடினர்.

குடியரசுத் தலைவர் சென்றப் பாதையில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த விபத்து நடந்ததால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.