தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைப் பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்த கனரக லாரியும் அவ்வழியே எதிர்திசையில் வந்த காரும் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கின. இதில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தது தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் கார் ஓட்டுனர் ஜோகன் என்பது தெரியவந்துள்ளது. திருச்செந்தூர் முருகன்கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுனர் சந்திரசேகரை போலீசார் கைது செய்துள்ளனர்.