சென்னை மதுரவாயலில் விஷம் கலந்த மதுவை கொடுத்து கார் ஓட்டுநரை கொலை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்தவர் ராஜேஷ். கார் ஓட்டுநரான இவருக்கு நளினி என்வருடன் திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி குடிபோதையில் காரில் ராஜேஷ் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை குடும்பத்தினர் மதுரவாயல் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி மற்றும் குமரேசன் ஆகிய இருவரை மதுரவாயல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பத்மாவதிக்கும் இறந்து போன ராஜேஷ்க்கும் தொடர்பு இருந்துள்ளது. பின்னர் பத்மாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பத்மாவதி ராஜேஷின் பழக்கத்தை துண்டித்துள்ளார். இதனால் ராஜேஷ், பத்மாவதியை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பத்மாவதி, குமரேசனை வைத்து ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதன்படி குமரேசன் ராஜேஷை மது அருந்த அழைத்து வந்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை அடித்து காரில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது காரில் மதுபோதையில் ராஜேஷ் தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டில் தகவல் தெரிவித்தனர். போதையில் தான் ராஜேஷ் தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து அவரது வீட்டில் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து காலை ராஜேஷ் காரில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் உயிர் இழந்த ராஜேஷ் வீட்டில் காவல் நிலையத்தில் புகார் அளிக்காதப்போதும் மதுரவாயல் காவல்துறையினர் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்து கொலையாளிகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குடிபோதையில் இறந்ததாக நினைத்தவர் கொலை செய்யப்பட்டது தெரியவர, முக்கிய தடயமாக குமரேசன் ராஜேஷ்க்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை கொண்டே காவல்துறையினர் கொலையாளி குமரேசன் மற்றும் பத்மாவதியை கண்டறிந்து உள்ளனர். இந்த கொலையை மேலும் உறுதிப்படுத்த உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்யவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.