நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப் பலகை கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தினோ வர்கீஸ் மற்றும் ஜிஜோ தாமஸ் ஆகிய இருவரும் கார் மூலம் பெங்களூர் சென்று விட்டு நாமக்கல் வழியாகச் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது கார் நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகச் சாலையின் நடுப்பகுதியில் உள்ள பெயர்ப் பலகை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த தினோ வர்கீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜிஜோ தாமஸை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்துத் தகவலறிந்த நல்லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.