தமிழ்நாடு

கார் மீது பைக் மோதி விபத்து - கோயிலில் இருந்து வீடு திரும்பியபோது நடந்த அதிர்ச்சி

webteam

திருவாரூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

திருவாரூர் மாவட்டம் என்கண் பகுதியை அடுத்த மலையூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், தனது குடும்பத்தாருடன் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சென்று விட்டு வீட்டிற்கு காரில் வந்துள்ளார். அதேவேளையில் திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காக்கா கோட்டூர் என்னுமிடத்தில் சரவணன் வந்த இருசக்கர வாகனம், புஷ்பராஜ் சென்ற கார் மீது மோதியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரவணனுக்கு லேசான முறிவு ஏற்பட்டது. இதனைக் கண்டு அவ்வழியாக சென்ற சென்ற வாகன ஓட்டிகள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காரில் பயணித்த ருக்மணி, எதுநந்தவர்மன், கஸ்தூரி, கார் ஓட்டி வந்த புஷ்பராஜ் ஆகியோர் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 10 நாட்களுக்கு முன்பு இதேபோன்று கார் ஒன்று குளத்தில் பாய்ந்து குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இதேபோல் இரு தினங்களுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் சென்ற கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் இது போன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதால் ஆபத்தான இடங்களில் தடுப்பு சுவர்கள் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.