விபத்தில் சிக்கிய கார்
விபத்தில் சிக்கிய கார் PT WEB
தமிழ்நாடு

திருப்பூர் : அரசுப் பள்ளியில் பாய்ந்து நடைமேடையில் ஏறிய கார்; அந்தரத்தில் பறந்த பள்ளி மாணவன்!

webteam

திருப்பூர் வித்தியாலயம், பாரதி நகர்ப் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நாளை ஆண்டு விழா நடைபெற உள்ளதையொட்டி மாணவ - மாணவிகள் பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் இருந்து வித்யாலயம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளிக்குள் வளாகத்தில் புகுந்தது. பள்ளி வளாகத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பள்ளி வளாகம்

இந்தவிபத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் தரணி நாதன் என்ற மாணவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் கார் ஓட்டுநரும், மற்றொரு நபரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காருக்குள் சிக்கிக் கொண்ட ஒருவரை மட்டும் பிடித்து பொது மக்கள் தாக்கியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பைக்

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரின் அங்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், காரை ஓட்டி வந்த கார்த்தி மற்றும் அவருடன் வந்த செந்தில் குமார், கர்ணன் ஆகிய 3 பேரும் மது போதையில் இருந்தது தெரிய வந்ததுள்ளது. தப்பியோடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.