தமிழ்நாடு

"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

webteam

அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் தலைவர் சாந்தா மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சாந்தா, மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93. மருத்துவர் சாந்தாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வைக்கப்பட உள்ளது.

ஆரம்பத்தில் மகப்பேறு மருத்துவராக இருந்த சாந்தா அதன்பின் புற்றுநோய் துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார். 1955 ஆம் ஆண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இணைந்த சாந்தா, 67 ஆண்டுகளாக அங்கு பணியாற்றினார். தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை பெற்றுள்ள அவர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ் பெற்றவர் ஆவார்.

அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. அவர் எனக்கு தாய் போன்றவர். இறுதிவரை அவர் மக்களுக்காக சேவையாற்றினார். அது பிற மருத்துவர்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்பதற்காக அதிகமாக உழைத்தவர். அவர் மிகவும் எளிமையானவர். அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். முத்துலட்சுமி அம்மையாருடன் புற்றுநோய் மையத்தில் இணைந்து மருத்துவ சேவையாற்றினார்.” என்றார்

சுமந்த் சி ராமன் கூறும்போது, “ அவர் ஒரு சகாப்தம். மற்றவர்களுக்காக வாழும் மக்கள் என்றும் இறப்பதில்லை. ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல் ஒரு தாய்போல அவர் நோயாளிகளை அணுகினார்.” என்றார்.