தமிழ்நாடு

கோயில் நிலங்கள் மற்றவர்கள் பெயரிலிருப்பின் பட்டாக்கள் ரத்து - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

Veeramani

கோயில் நிலங்கள் மற்றவர்கள் பெயரிலிருப்பின், அந்த பட்டாக்களை ரத்து செய்ய அறநிலையத்துறை ஆய்வாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரியைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட வீரையாச்சலேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் யூடிஆர் திட்டத்தில் தவறுதலாக குறிப்பிடப்பட்டு வீரையாச்சலேஸ்வரர் சுவாமி கோயில் மேனேஜர், ஐ.பூவாயி, பெரியக்காள், ராஜாமணி என்ற பெயர்களில் பட்டா பதிவாகியுள்ளது. எனவே இந்த பட்டாக்களை ரத்து செய்து, வீரையாச்சலேஸ்வரர் சுவாமி கோயில் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவினை நீதிபதிகள் துரைச்சுவாமி, முரளிசங்கர் அமர்வு விசாரித்தனர். அரசு தரப்பில், ‘பட்டாவை ரத்து செய்யக்கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது, பட்டாக்களை ரத்து செய்ய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கோயில் நிலங்களுக்கு மற்றவர்கள் பெயரில் பட்டாக்கள் இருப்பின் அவற்றை ரத்து செய்ய அறநிலையத்துறை ஆய்வாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாக்களை ரத்து செய்வது தொடர்பாக அறநிலையத்துறை ஆய்வாளர் மேல்முறையீடு செய்தால், அதை குளித்தலை ஆர்டிஓ சட்டத்திற்கு உட்பட்டு விரைந்து முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.