மின்வாரியத்திற்கு தனியார் மூலம் பணியாளர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களுக்கு தனியார் மூலம் பணியமர்த்த உத்தரவிட்ட மின்சாரத் துறை, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. இதுதொடர்பாக மின்வாரிய தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தனியார் மூலம் பணியமர்த்தும் அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இன்று திமுக தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வாயிலாக தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.
இதனிடையே காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிப்பதாக கூறி கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மின்வாரியத்திற்கு தனியார் மூலம் பணியாளர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். போராட்டங்களை கைவிட்டு தொழிற்சங்கங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். கேங்மேன் பணியிடங்களுக்கான வழக்கை வாபஸ் பெற்றால் உடனடியாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.