சென்னை மாநகராட்சியில் ஊழலை தடுக்காத ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தன் வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி சென்னை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சிக்கு எதிராக லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பில் சென்னை மாநகராட்சியில் ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக டிஜிபி-யுடன் கலந்தாலோசித்து புதிய அதிகாரிகளை கொண்டு ஊழல் கண்காணிப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து மாநகராட்சி மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் ஊழலை தடுக்காத ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஊழல் கண்காணிப்பு பிரிவை முறையாக கண்காணிக்க மாநகராட்சி ஆணையருக்கு ஆணையிட்ட உயர்நீதிமன்றம் மாநகராட்சி பணியாளர்களை நேரடியாக நியமிப்பதற்கு பதிலாக நிபுணர்குழுவை கொண்டு நியமிக்க அறிவுறுத்தியுள்ளது.