தமிழ்நாடு

இரட்டை இலையை முடக்க முயன்ற டிடிவி தினகரன் அதிமுக இணைப்பு பற்றி பேசலாமா? - ஓ.எஸ்.மணியன்

kaleelrahman

இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்ட டிடிவி தினகரன் அதிமுக இணைப்பு பற்றி பேசுவது வினோதமானது என நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டியளித்தார்.

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, அரசு அதிகாரிகள், மீனவ கிராமத்தினர் பங்கேற்றனர்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும்போது... இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரன் அதிமுக இணைப்பு பற்றி பேசுவது வினோதமானது.

18 சட்டமன்ற உறுப்பினர்களை தன்னோடு அழைத்துச் சென்று அதிமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வேலை பார்த்தவர் டிடிவி தினகரன் என்றவர் தொடர்ந்து, சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.