விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா எனச் சிந்திக்க வேண்டும் என இசையமைப்பாளரும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான கங்கை அமரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று திடீரென்று ஆடையின்றி தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். பிரதமர் அலுவலகம் இருக்கும் கடுமையான பாதுகாப்பு நிறைந்த சாலையில் அவர்கள் நடத்திய இந்த திடீர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியே கருத்துத் தெரிவித்த கங்கை அமரன், நிர்வாணப் போராட்டம் அவசியமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார். திரைப்படத் துறையினரையெல்லாம் சந்திக்கும் பிரதமர் தங்களைச் சந்திக்க மறுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுவது குறித்து பேசிய கங்கை அமரன், ஒரு பிரதமர் எல்லோரையும் சந்திக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். “தான் ஒரு பாமர அரசியல்வாதிதான் என்று கூறிய கங்கை அமரன், பெரிய விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கர் வைத்திருப்பவர்கள் கூட கடன் வாங்கிக் கொண்டு அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நியாயம்?” என்றார்.