தமிழ்நாடு

ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? – அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

kaleelrahman

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா என்பது குறித்து மருத்துவத்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இச்சூழலில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தொற்றை கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதிக பாதிப்புகளை சந்தித்துவரும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.