தமிழ்நாடு

உசிலம்பட்டி: மலைவாழ் மக்களுக்கு சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்

Sinekadhara

உசிலம்பட்டி அருகே தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் தலைமையில் நடைபெற்றது.

மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் மற்றும் சாதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை நேரில் சென்று ஆய்வுசெய்து விரைந்து வழங்க அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். இதன் அடிப்படையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சாதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றுகளை பெறுவதற்கான சிறப்பு முகாம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை, வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் கலந்துகொண்ட இந்த சிறப்பு முகாமில் மலைவாழ் மக்கள் வனப்பகுதிக்கு சென்றுவர அனுமதி அடையாள அட்டை வழங்கவேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் சாதிச் சான்று, பிறப்புச் சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான மனுக்களை உரிய அதிகாரிகளிடம் வழங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட மனுக்களுக்கான சான்றுகளை கோட்டாச்சியர் சங்கரலிங்கம் மலைவாழ் மக்களிடம் வழங்கினார்.